“முயற்சி திருவினையாக்கும்” என்பதற்கு இலக்கணமாக ஒரு மென்பொருள் பொறியாளரின் அசுர வளர்ச்சி தற்போது சமூக வலைதளங்களில் பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறது. வெறும் 15,000 ரூபாய் ஊதியத்தில் ஒரு சிறிய நிறுவனத்தில் இன்டர்னாக (Intern) தனது பணியைத் தொடங்கிய அந்த இளைஞர், இன்று உலகின் முன்னணி நிறுவனமான கூகுளில் ஆண்டுக்கு 7.5 கோடி ரூபாய் சம்பளத்தில் உயரிய பதவியைப் பெற்றுள்ளார்.

பிரபல தொழிலதிபர் அங்குர் வாரிகூ (Ankur Warikoo) இந்த வியக்கத்தக்க பயணத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த இளைஞர் இந்த நிலையை அடைய சுமார் 500-க்கும் மேற்பட்ட கோடிங் (LeetCode) பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு பயிற்சி பெற்றதும், 12-க்கும் மேற்பட்ட ஓபன் சோர்ஸ் திட்டங்களில் பங்களித்ததும் தான் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

வெறும் அதிர்ஷ்டத்தால் இந்த வெற்றி கிடைக்கவில்லை; ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது திறமையை வளர்த்துக்கொண்டு, திட்டமிட்டு நிறுவனங்களை மாற்றியதே அவரை இந்த உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. “தொழில்நுட்ப உலகில் லாட்டரி என்று எதுவும் இல்லை, கடின உழைப்பு மட்டுமே கை கொடுக்கும்” என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.