தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட இருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் கூட்டணி என்றும் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது அறிவிப்பு வெளியான நிலையில் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் புதிய நிர்வாகிகளை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை விஜய் தீவிரப்படுத்தி வருகிறார்.

அடுத்த மாதம் மதுரையில் நடிகர் விஜய்யின் இரண்டாவது மாநில மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில் கட்சியினர் அதற்கான பணிகளை கவனித்து வருகின்றனர். இதற்கிடையில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை நடிகர் விஜய்  வெளியிட்டுள்ளதோடு இரண்டு கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைப்பது இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

நடிகர் விஜய் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து MY TVK செயலியை அறிமுகப்படுத்திய தோடு வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற நோக்கத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தொடங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் செய்தியார்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விஜய் புதிய செயலியை வெளியிட்டதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தல் திருப்புமுனையாக அமையும் என்றும் திருப்புமுனையை நோக்கி தான் அனைவரும் பயன்படுகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் நடிகர் விஜய்க்கு முதலில் ஆதரவு கொடுத்த சீமான் அவர் கட்சியின் கொள்கைகளை அறிவித்த பிறகு எதிர்ப்பு தெரிவித்தார். அதே நேரத்தில் நடிகர் விஜய்க்கு பல விஷயங்களில் அவர் வாழ்த்து சொல்லி ஆதரவாகவும் இருக்கிறார். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் சீமான் தனித்துப் போட்டியிடுவேன் என்று கூறியுள்ள நிலையில் அவரை அதிமுக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி அழைத்துள்ளார். அதே நேரத்தில் விஜயுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சீமான் அதையெல்லாம் மறுத்து தேர்தலில் தனித்து தான் போட்டி என்று அறிவித்துள்ள நிலையில் தற்போது புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக விஜய்க்கு வாழ்த்து சொன்னதோடு 2026 தேர்தல் திருப்புமுனையாக அமையும் என்று அவர் கூறியது பரபரப்பாக பேசப்படுகிறது.