டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டிக்குப் பின் நட்பாக உரையாடிக் கொண்டிருந்த போது, டெல்லி அணியின் ஸ்பின்னர் குல்தீப் யாதவ், KKR வீரர் ரிங்கு  சிங்கை இரண்டு முறை கன்னத்தில் அறைந்த  வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது. இதனால் இருவருக்குள் இடையூறு ஏற்பட்டதா? என ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் இடையே கேள்விகள் எழுந்தன.

இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. “மீடியா vs நண்பர்கள் இடையிலான உண்மை!” என தலைப்பிட்டு, குல்தீப் மற்றும் ரிங்கு  இருவரும் சிரித்தபடியே தோளில் தோள் மோதிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தனர். இதன் மூலம், அந்த வீடியோவில் காணப்படும் காட்சி வேடிக்கையாக நடந்தது என்றும், இருவரும் நல்ல நண்பர்கள் எனவும் நிரூபிக்கப்பட்டது.

 

இந்நிலையில், போட்டிக்குப் பிந்தைய அந்த உரையாடல் நகைச்சுவை மற்றும் தோழமை அடிப்படையிலானது என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டனர். “சமூக ஊடகம் பெரிதாகப் படைத்த காட்சி அது” எனக் கருத்து தெரிவித்த ரசிகர்கள், இருவரும் நண்பர்களாக இருப்பதை உறுதிப்படுத்தியதற்காக KKR அணிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், போட்டிக்கு பிந்தைய நட்புறவின் நிமிடங்களையும் மீடியா எவ்வாறு தவறாக பிரதிபலிக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு என பார்க்கப்படுகிறது.