
நாடு முழுவதும் இந்திய ரயில்வே மே 1 முதல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் பெரும் மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய விதிகளின் கீழ், முன்பதிவு காலம், தட்கல் டிக்கெட் முன்பதிவுப் போக்கு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. பயணிகள் எளிதாகவும், துல்லியமாகவும் சேவையைப் பெறும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி தட்கல் முன்பதிவுகளும் மே 1 முதல் புதிய விதிகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. ஏசி வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 10 மணிக்கு, ஸ்லீப்பர் வகுப்புகளுக்கானது காலை 11 மணிக்கு துவங்கும். மேலும், ஒரு பயனர் ஒரே நாளில் அதிகபட்சம் இரண்டு தட்கல் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தட்கல் திட்டத்தில் ஒதுக்கப்படும் இருக்கைகள் 30 சதவீதம் ஆக இருக்க ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது பெறும் பணத் திருப்புச் செலுத்துதலில் புதிய துல்லியமான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி 48 மணிநேரத்திற்கு முன்பு ரத்து செய்தால்: 75% பணம் திரும்பும். 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால்: 50% பணம் திரும்பும். 24 மணிநேரத்திற்குள் ரத்து செய்தால்: பணம் திரும்ப கிடைக்காது.
மேலும், உறுதிப்படுத்தப்படாத காத்திருப்பு டிக்கெட்டுகளுக்கு முழு பணமும் திருப்பி அளிக்கப்படும்.
அதோடு இனி காத்திருப்பு டிக்கெட்டுகள் பொதுப்பெட்டிகளில் மட்டுமே செல்லுபடி ஆகும். அதன்பிறகு காத்திருப்பு டிக்கெட்டிகளை வைத்து ஸ்லீப்பர், ஏசி மற்றும் கோச் பெட்டிகளில் பயணிக்க முடியாது. இதோடு ரயில் டிக்கெட்டின் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.