இன்றைய காலகட்டத்தில் செல்போன் வெடித்து சிதறி விபத்துக்கள் நிகழும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் செல்போன் திடீரென வெடிப்பதற்கான காரணம் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. ஒரிஜினல் சார்ஜர்களை பயன்படுத்தாமல் மூன்றாம் தரப்பு சார்ஜர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பணத்தை சேமிக்க நினைத்து இந்த தவறை செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். தரம் இல்லாத பேட்டரி ஸ்மார்ட்போன் தீ விபத்திற்கு முக்கிய காரணமாகிறது. மூன்றாம் தரப்பு பேட்டரிகளை பயன்படுத்துவதும் தவறுதான்.

சில வருடங்களாக பயன்படுத்தி செயல்திறன் குறைந்துள்ள பேட்டரியை பயன்படுத்தாமல் புதிதாக மாற்றி விட வேண்டும். வீக்கமாக இருக்கும் பேட்டரியை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் இவை சார்ட் சர்க்யூட், அதிக வெப்பம் அல்லது கசிவு ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. முடிந்த அளவிற்கு படுக்கையறையில் சார்ஜ் போடுவதை தவிர்க்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டு தலையணையின் கீழ் செல்போனை வைத்துக்கொண்டு தூங்கக் கூடாது.

போன் அதிகமாக சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போனில் வரம்பு மீறி வெப்பமாகும் போது செயலிழக்கவும் தீப்பிடிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. அதனைப் போலவே சார்ஜ் போட்டுக்கொண்டு மொபைல் பேசுவது எளிதில் தீப்பிடிக்க காரணமாக இருப்பதால் சார்ஜ் போடும்போது மொபைலை பயன்படுத்தக் கூடாது. அதேசமயம் போனில் காணப்படும் சிப் ஓவர் லோடு செய்யப்பட்டால் எளிதில் தீப்பிடிக்கும் அபாயம் அதிகம் உள்ளது.