
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை வடக்கு கடற்கரை வழியாக போதைப்பொருள் கடத்துவதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சத்தீஸ்வரன்(20), காமேஷ்(25)மற்றும் கண்ணன்(35) ஆகிய மூவரும் இணைந்து போதைப்பொருள் கடத்த முயன்ற போது போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். பின்பு மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது வைகை நகர் ரயில் பாதை அருகே உள்ள முட்புதரில் ரூபாய் 18 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது.
அதன் அடிப்படையில் 180 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மூவரும் சேர்ந்து 180 கிலோ போதை பொருளை வடமாநிலத்தில் இருந்து வாங்கி இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றது போலீசாருக்கு தெரிய வந்தது. தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.