உத்திரபிரதேசத்தில் உள்ள ராசாயினி எனும் கிராமத்தில் வசித்து வரும் ஆதேஷ் என்பவருக்கும் ஜஸ்ரானா நகரில் ஜஜூமாய் கிராமத்தில் வசித்து வரும் மனோஜ் குமாரி என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு குடும்பத்தினரும் இணைந்து இல்லம் ஒன்றில் திருமண ஏற்பாடுகளை செய்து  கொண்டிருந்த நிலையில் திருமண ஊர்வலம் நேற்று முன் தினம் இரவு விருந்தினர் இல்லம் வந்தடைந்தது. இந்நிலையில் இரவு நேர உணவு முடிந்த பின் மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு தயாராகியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக மணமகன் முன்பே மேடைக்கு வந்து அமர்ந்துவிட்டார். ஆனால் மணமகள் அலங்காரமுடித்து தோழிகள் சூழ மெல்ல நடை போட்டு மேடைக்கு வந்துள்ளார். அதுவரை அமைதியாக இருந்த மணமகன் திடீரென மணமகள் கையைப் பிடித்து சீக்கிரம் வரும்படி இழுத்து இருக்கின்றார். இதனால் அவசரத்தில் மணமகள் மேடையில் தவறி கீழே விழுந்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த மணமகள் திருமணம் வேண்டாம் என முடிவு செய்துள்ளார். ஆதேஷின் இந்த செயலால் மணமகளின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து மேடையிலேயே இரு குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை சரி செய்ய முயற்சி செய்தனர். ஆனால் இரு குடும்பத்தினரும் மணமகளை சமரசம் செய்ய முயற்சி செய்தபோது மணமகள் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்துள்ளார். திருமணம் செய்ய முடியாது என கூறியுள்ளார். இதன் பின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.