கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய பெற்றோருடன் கலந்து கொண்டார். அதன்பின் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது, மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லுவோம். நான் இங்கு நிற்பது என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தவர்களை பற்றி பேசுவதற்காக. நான் இந்த கல்லூரிக்கு என் தந்தையுடன் வந்த போது ஒரு டிரங்க் பெட்டியுடன் வந்தேன். கடந்த 2002-ம் ஆண்டு இந்த கல்லூரியில் நான் சேர்ந்தபோது இந்த கல்லூரி எனக்கு சரிப்பட்டு வருமா என்று வாசலில் நின்று என் தந்தையிடம் கேட்டேன். ஆனால் என்னை உயர்த்தியது இந்த கல்லூரி தான்.

இந்தியாவுக்குள் எந்த பகுதிக்குள் நான் சென்றாலும் இந்த கல்லூரியை என்னால் மறக்க முடியாது. இந்த கல்லூரிக்கு என்று ஒரு தனி மதிப்பு இருக்கிறது என்று கூறினார். அதன் பிறகு அண்ணாமலை கல்லூரியின் நாட்கள் பற்றியும் தன்னுடைய பெற்றோர் பற்றியும் சில விஷயங்களை கூறி மேடையில் கண்கலங்கிய போது அண்ணாமலையின் பெற்றோர் எழுந்து நின்று கும்பிட்டனர். இந்த காட்சி அங்கிருந்தவர்கள் மத்தியில் கண்கலங்க செய்தது. மேலும் கரூரில் பிறந்த அண்ணாமலை 9 ஆண்டுகள் கர்நாடகாவில் பல பிரிவுகளில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ள நிலையில் அவர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் கர்நாடகாவின் சிங்கம் என்று அழைக்கப்பட்டார்.