தமிழகத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்குவதற்கு சட்டம் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இருவது சதவீதம் பணியிடங்கள் இதற்கு ஒதுக்கப்பட்டன. தமிழ் வழியில் பயின்றவர்களின் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தால் யாரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும் என்பது குறித்த கேள்வி எழுந்ததால் பள்ளிகள் அளவில் பிரச்சனை இருந்தபோது கடந்த 2021 ஆம் ஆண்டு இதற்கு தீர்வு காணப்பட்டது.

அதன்படி பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அல்லது முதன்மை கல்வி அலுவலர் அல்லது உரிய அலுவலரிடம் இருந்து தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழை பெற்று சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்த போது கல்லூரிகளிலும் இந்த பிரச்சனை இருந்தது. இந்த நிலையில் உயர்கல்வித்துறை, வேளாண்மை, மருத்துவம், மீன்வளம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளுக்கு உட்பட்ட கல்லூரிகள் மூடப்பட்டிருந்தால் அந்த கல்லூரிகள் ஏற்கனவே இணைவு பெற்ற பல்கலைக்கழக பதிவாளர் இடம் இருந்து தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.