
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் சாலையில் இருபுறமும் ஏராளமான கடைகள் அமைந்துள்ளது. அதன் இருபுறங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை தூர்வாரப்பட்டது. அதன் பிறகு சாக்கடையை மூடப்படாமல் திறந்தவாறு விட்டனர். இதுகுறித்து பொதுமக்களும், வணிக நிறுவன ஊழியர்களும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
ஆனால் புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளம்பெண் ஒருவர் திறந்து கிடந்த பாதாள சாக்கடையை கவனிக்காமல் குழிக்குள் விழுந்து விட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த பெண்ணை மீட்டனர். அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.