கர்நாடக சட்டமன்றத்தில், அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முஸ்லிம் சமூகத்திற்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டவுடன், பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புடன் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் சபாநாயகர் யூ.டி. காதரின் இருக்கையை முற்றுகையிட்டு, மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். கடந்த மாதம், முஸ்லிம் எம்எல்ஏக்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் இடஒதுக்கீடு கோரி முதலமைச்சர் சித்தராமையாவிடம் மனு அளித்ததை அடுத்து, காங்கிரஸ் அரசு இந்த மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்தது.

ஏற்கனவே அரசுத் திட்டங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடும் சேர்க்கப்படுவது தவறு அல்ல என அரசு தரப்பினர் வாதிட்டனர். ஆனால் பாஜக எம்எல்ஏக்கள், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது எனக் கூறி வலியுறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் ஆத்திரம் அடைந்து காங்கிரஸ் அரசு மற்றும் சபாநாயகர் மீது கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.