தமிழக அரசு மும்மொழி கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் கல்விக்கான நிதியை விடுவிப்போம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்றும் தேசிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் ஹிந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் பாஜகவினர் தனியார் பள்ளிகளில் மட்டும் ஹிந்தி கற்பிக்கப்படுவதாகவும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை மட்டும் ஹிந்தி படிக்கக் கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக பாஜக மற்றும் திமுக இடையே கருத்து மோதல் என்பது நிலவிவரும் நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் எதற்காக மும்மொழி கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். இது பற்றி தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியதாவது, முகமூடி தான் ஹிந்தி. ஆனால் அதற்குள் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம். தமிழ் மொழி தான் அனைத்து திராவிட மொழிகளுக்கும் தாய். சமஸ்கிருதமும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் ஹிந்தி உருவானது. மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் சமஸ்கிருதம் புகுந்துவிடும். ஹிந்தி என்ற முகமூடியில் சமஸ்கிருத ஒழிந்துள்ளது. இந்தியை ஏற்றுக் கொண்டதால் பீகார் மாநில மக்களின் தாய்மொழியான மைத்திலி வழக்கொழிந்தது. இந்தியாவின் பெரிய மாநிலமாக இருக்கும் உத்திரபிரதேச மாநிலத்தின் தாய் மொழி ஹிந்தி என்று நினைப்போம்.

ஆனால் அது உண்மை கிடையாது. மண்ணின் மைந்தர்களுடைய மொழிகள் அனைத்தும் ஹிந்தி என்ற ஆதிக்க மொழியின் படையெடுப்பால் சிதைந்து விட்டது. வட இந்திய மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட அந்த மண்ணின் மொழிகள் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் படையெடுப்பால் அழிந்துவிட்டது. பெரியார் அண்ணா மற்றும் கலைஞர் வழியிலான திராவிட இயக்கம் எப்போதும் ஆதிக்க மொழியை எதிர்த்து நிற்கும். தமிழை பாதுகாக்கும். ஹிந்தி திணிப்பை எதிர்க்க திமுகவுடன் பல கட்சிகள் துணை நிற்கிறது. கழகத்தை எப்போதும் அரசியல் களத்தில் எதிர்க்கும் கட்சிகள் கூட ஹிந்தியை வேண்டாம் என்று தான் கூறுகிறது. மேலும் எப்போதும் ஹிந்தியை பாதுகாக்கும் அரணாக திராவிட இயக்கங்கள் செயல்படும் என்று கூறினார்.