மும்பையில் உயர்மட்டப் பாதையில் இயக்கப்படும் மோனோ ரெயில் போக்குவரத்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று காலை நடந்த சோதனை ஓட்டத்தின்போது மீண்டும் விபத்தில் சிக்கியது.

கடந்த செப்டம்பர் 15 மற்றும் 19ஆம் தேதிகளில் ஏற்பட்ட கோளாறுகளால் நடுவழியில் நின்று, கண்ணாடிகளை உடைத்துப் பயணிகள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று வடாலா டெப்போ அருகே தண்டவாளம் கிராசிங் செய்யும் இடத்தில் சென்றபோது, மோனோ ரெயில் மற்றொரு தண்டவாளம் மீது மோதி நின்றது. இந்த விபத்தில், ரெயில் பெட்டியின் அடிப்பகுதி பலத்த சேதமடைந்து சுக்குநூறாக நொறுங்கியது.

சோதனை ஓட்டம் என்பதால் பயணிகள் யாரும் இல்லை என்றாலும், ரெயில் ஓட்டுநருக்குத் தலையில் காயம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மோனோ ரெயில் நிர்வாகம் இதை ‘சிறிய விபத்து’ என்று குறிப்பிட்டாலும், ரெயில் தொடர்ந்து ஆபத்துகளில் சிக்குவது பயணிகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.