நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமணத்தைக் குறித்து உருவாக்கப்பட்ட ஆவணப்படம் ‘நயன்தாரா: பியாண்ட தி பேரி டேல்’ (Nayanthara: Beyond The Fairy Tale) கடந்த ஆண்டு நவம்பரில் நெட் பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியது. இந்த ஆவணப்படம் வெளியானதிலிருந்து தொடக்கமே சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

முதலில், இந்த ஆவணப்படத்தின் டிரெய்லரில் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் மூன்று நிமிட காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான தனுஷ் நடத்திய வுண்டர்பார்ஸ் நிறுவனம், “தங்களது படக்காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு” கோரி வழக்கு தொடர்ந்தது. இது தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மற்றொரு புதிய வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை பதிவு செய்துள்ளவர், ஏபி இண்டர்நெஷனல் நிறுவனம். அவர்கள், சந்திரமுகி திரைப்படத்திலிருந்து சில காட்சிகள் நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

“அந்தக் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்ட இந்த வழக்கில், நெட் பிளிக்ஸ் பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படம் தொடர்பான சர்ச்சைகள் தொடரும் நிலையில், இவை நயன்தாரா மற்றும் நெட் பிளிக்ஸ் நிறுவனம் எதிர்கொள்ளும் சட்டப்பூர்வ சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம் எனக் கூறப்படுகிறது.