
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 12 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிக்க முடிவுசெய்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச வர்த்தகத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த 12 நாடுகளின் பட்டியல் திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிவித்த அவர், சில நாடுகளுக்கு 70% வரை வரி விதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “கட்டணங்கள் தொடர்பான சில கடிதங்களில் நான் கையெழுத்திட்டுள்ளேன். அவை திங்கட்கிழமை 12 நாடுகளுக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு நாட்டும் தனது ஏற்றுமதி பொருட்களுக்கு தனித்தனியான வரிகளை எதிர்நோக்க வேண்டும்” என கூறியுள்ளார். இந்த புதிய வரிகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வரி நடவடிக்கையில் இந்தியாவும் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, அமெரிக்கா கோரும் விவசாயம் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் சந்தை அணுகல் தொடர்பாக, இந்தியா ஒருமித்த முடிவை எடுக்கத் தவறியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதன் காரணமாக, இந்திய உயர் மட்டக் குழு அமெரிக்காவில் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு திரும்பியுள்ளது.
இந்நிலையில், வரி விதிப்பை ஜூலை 9-ம் தேதிக்குள் தற்காலிகமாக நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், இரு நாடுகளும் அந்த தேதிக்குள் முடிவிற்கு வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாவது, “எந்த காலக்கெடுவின் அடிப்படையிலும் இந்தியா எந்த ஒரு அசைபோக்கான வர்த்தக ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாது” என்றார்.
இதனால், இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக உறவு இன்னும் சிக்கலான நிலைக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.