
இங்கிலாந்து அணிக்கு எதிரான யு-19 ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில், 14 வயதான இந்திய இளைய வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சனிக்கிழமை அதிவேக சதம் விளாசி உலக அளவில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்த ஆட்டத்தில், மூன்றாவது ஓவரிலேயே களமிறங்கிய வைபவ், தொடக்கம் முதலே பவுண்டரிகளைப் பறக்கவிட்டு, முற்றிலும் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்தார். வெறும் 52 பந்துகளில் சதம் அடைந்த அவர், பாகிஸ்தானின் கம்ரான் குலாம் 2013-இல் 53 பந்துகளில் அடித்த சத சாதனையை முறியடித்தார்.
அதன் பிறகு இன்னும் அபாரமாக ஆடிய சூர்யவன்ஷி, 78 பந்துகளில் 143 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்குகின்றன. அவரது ஸ்டிரைக் ரேட் 183.33 ஆக பதிவானது. இந்நிலையில் இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 363 ரன்கள் குவித்தது.
இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகளில் 48, 45 மற்றும் 86 ரன்கள் எடுத்து ஏற்கனவே தனது ஃபார்மை நிரூபித்திருந்த வைபவ், கடந்த போட்டியில் வெறும் 20 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். இவரது தொடர் அபார ஆட்டம், எதிர்கால இந்திய தேசிய அணிக்கான உறுதியான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இது மட்டுமல்லாது, 2025 IPL சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ், குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் வியக்க வைத்திருந்தார். அதேபோல் கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இளையோர் டெஸ்ட் போட்டியில், 56 பந்துகளில் சதம் அடித்து, மொயின் அலி 2005-இல் செய்த சாதனையை சமன் செய்தார்.
யு-19 ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்தவர்கள்:
வைபவ் சூர்யவன்ஷி (இந்தியா) – 52 பந்துகள் – 2025
கம்ரான் குலாம் (பாகிஸ்தான்) – 53 பந்துகள் – 2013
தமீம் இக்பால் (வங்கதேசம்) – 68 பந்துகள் – 2005/06
ராஜ் அங்கத் பவா (இந்தியா) – 69 பந்துகள் – 2021/22
ஷான் மார்ஷ் (ஆஸ்திரேலியா) – 70 பந்துகள் – 2001/02
இந்த சாதனைகள் அனைத்தும் பார்த்தால், 14 வயதிலேயே உலக சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ஜாம்பவான் என வர்ணிக்கப்படுகிறார். இந்திய கிரிக்கெட் வாரியம் இவரை திறமையான பிளேயராக தனியாக கவனிக்கத் தொடங்கியுள்ளது.