தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முறிவடைந்தது. இரு கட்சிகளும் தனித்தனியாக களம் கண்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை. பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு சென்று வந்த பிறகு அதிமுகவை விமர்சிப்பதை நிறுத்திவிட்டார். சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமியிடம் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்டபோது தேர்தலுக்கு இன்னும் நாள் இருப்பதால் அந்த சமயத்தில் அது தொடர்பான அறிவிப்புகள் வெளிவரும் என்றார். இருப்பினும் அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி என்பது அமையாது என்று அந்த கட்சி தலைவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் ஆங்கில ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அண்ணாமலையிடம் அதிமுக பாஜக கூட்டணி பற்றி கேள்வி எழுப்பினர்.

அதாவது அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்று அக்கட்சி தலைவர்கள் சொல்லும் நிலையில் சமீப காலமாக பாஜகவினரின் பேச்சுக்கள் மாறுகிறதே என்று கேட்டனர். அதற்கு அண்ணாமலை எங்களுடைய பேச்சுக்கள் மாறவில்லை என்றார். அதன் பிறகு பாஜக வளர வேண்டும். அதற்கு ஏற்றார் போன்று நாங்களும் எங்களை கட்டமைக்க வேண்டும். அரசியல் சூழலில் கட்சி வளர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். எனக்கு அதிமுகவுடன் எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது. அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்றார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக பாஜக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறினார்.