தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற உள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று பிற்பகல் புயலாக வலுப்பெற உள்ளது.

இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கடலோர மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின்னர் முன்னேற்பாடுகள் தொடர்பான விவரங்களை தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் கேட்டறிந்தார். சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து, சென்னையில் செயல்பட்டு வரும் 43 தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் 1,100 தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.