வெள்ளம் மற்றும் வெள்ளத்துக்கு பிந்தைய காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்  நடைபெற்று வரும் ஆலோசனையில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக பலருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் என்பது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இன்றைய தினம் ஒட்டுமொத்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில், டிசம்பர் 1ம் தேதியில் இருந்து இன்று வரை ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் மருத்துவ முகாம்கள் என்பது நடத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை பயனடைந்துள்ளதாகவும், 526 நடமாடும் மருத்துவ  முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளம் மற்றும் வெள்ளத்திற்கு பிந்தைய காலங்களில் மேற்கொள்ளக்கூடிய சுகாதார ஆலோசனைகள் தொடர்பாக அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. மருத்துவ சேவையை பொருத்தமட்டில் சுகாதார ஆலோசனைகளை மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்து முகாம்களில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நீரினால் பரவும் தொற்று நோய்களை தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் கொண்டுவருவதாகவும், குடிநீரை காய்சிதான் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோயை தடுக்க அடிக்கடி மக்கள் தங்களுடைய கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வெள்ள நீரில் நனைந்தபடி உணவு பொருட்களை பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே தெருவில் 1க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நோய்கள் கண்டறியப்பட்டால் உடனே சுகாதார நிலையத்தை அணுக வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய தண்ணீர் தொட்டியை குளோரினேஷன் செய்து பயன்படுத்த வேண்டும். சரியான அளவு குளோரின் உள்ள  தண்ணீரை பயன்படுத்த வேண்டும். ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளை நன்கு சுத்தம் செய்த பிறகு தான் அந்த நீரை பயன்படுத்த வேண்டும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதேபோன்று பூச்சிகள் கட்டுப்பாடு நடவடிக்கைகள், கொசுக்கட்டுப்பாடு, தற்காலிக தங்குமிடங்கள் இருக்கக்கூடிய சுகாதார நடவடிக்கைகள் விலங்குகள் அல்லது பறவைகளை பாதுகாப்பாக எப்படி அப்புறப்படுத்த வேண்டும். வெள்ளத்துக்கு பிந்தைய தட்டம்மை தடுப்பூசிகளை 15 வயது வரை இருக்கக்கூடிய அனைத்து வயது குழந்தைகளுக்கும் போட வேண்டும். முந்தைய நோய் தடுப்பு நிலையை பொருட்படுத்தாமல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு வேறு தடுப்பூசி  போடுவதற்கு முன்பாக 4 வார இடைவெளியை பராமரிக்க வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மேலும் கூடுமானவரை உடல்நல பிரச்சினைகள் குறித்து கூடுதல் தகவல்களுக்கு 24 மணி நேரமும் சுகாதார உதவி எண் 104-ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.