
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை தாலுகாவில் 36 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் அதை சார்ந்த கிராமங்கள் உள்ளது. ஊராட்சிக்கு ஒரு இடத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக கொடி கம்பம் நட்டு கொடியேற்று விழா நடத்த கட்சி நிர்வாகிகள் சார்பில் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. அதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இது குறித்து நிர்வாகிகள் கேட்டபோது இன்று நாளை என கூறி காலம் தாழ்த்தியுள்ளனர். இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கொடியேற்றலாம் என திட்டமிட்டனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழக வெற்றிக்கழக தலைவர் அருண் பிரசாத், செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் அய்யாதுரை ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகளும் தொண்டர்களும் தங்களது வீடுகளில் கொடி ஏற்றினர். இது குறித்த நிர்வாகிகள் கூறும்போது, தமிழக வெற்றி கழக கொடி ஏற்றி விழாவிற்கு முறைப்படி அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி தரவில்லை. பொது இடத்தில் கொடியேற்ற தான் போலீசார் அனுமதி வேண்டும். வீடுகளில் ஏற்ற அனுமதி தேவையில்லை. அதனால்தான் எங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகள் உறுப்பினர்கள் என சுமார் 2000 வீடுகளில் கொடி ஏற்றியுள்ளோம் என கூறியுள்ளார்.