பாகிஸ்தானில் சட்டவிரோதமாக வசித்து வந்த ஆப்கான் நாட்டு குடிமக்களை நாடுகடத்தும் பணிகள் தொடர்ந்த வண்ணம் நடைபெற்று வருகின்றன. மார்ச் 20 வரை 8.74 இலட்சத்திற்கும் அதிகமான ஆப்கான்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மக்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பயங்கரவாத ஆபத்துகளை தடுப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் இதில் எந்தவிதமான மோசடி நடவடிக்கைகளும் இடம் பெறாத என பாகிஸ்தான் அரசு உறுதி கொடுத்துள்ளது.

அதன் பிறகு மீண்டும் தங்கள் சொந்த நாடான ஆப்கானிஸ்தானுக்கு திரும்பும் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆப்கான் குடிமக்கள் அட்டையுடன் உள்ளவர்கள் நாடுகடத்தப்படுவதாகவும், காலக்கெடு முடிந்த பிறகு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில், ஆப்கான் வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, பாகிஸ்தான் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள ஆப்கான் அகதிகளை படிப்படியாக நாடு திரும்பச் செய்ய அந்நாட்டு அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.