சுமார் ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பவுள்ளனர். NASA உறுதிப்படுத்திய தகவலின்படி, புட்ச் வில்மோர் (Butch Wilmore) மற்றும் சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) ஆகியோர் மார்ச் 18 (செவ்வாய்க்கிழமை) இரவு (GMT) ஸ்பேஸ்X க்ரூ டிராகன் (SpaceX Crew Dragon) விண்கலத்தில் சென்று பூமியில் தரையிறங்க உள்ளனர். இவர்களுடன், மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர் மற்றும் ரஷ்ய வீரர் அலெக்ஸாண்டர் கொர்புனோவ் (Aleksandr Gorbunov) ஆகியோரும் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம், Boeing Starliner விண்கலத்தின் முதல் பயணத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால், அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாமல் ISS-ல் நீண்ட நாட்கள் இருந்தனர்.

NASA வெளியிட்ட அறிவிப்பின்படி, முதலில் மார்ச் 20க்குப் பிறகே இந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு, பூமிக்குத் திரும்பும் நிகழ்வு மார்ச் 18, செவ்வாய்க்கிழமை 5:57 PM (ப்ளோரிடா நேரம்) / இந்திய நேரப்படி மார்ச் 19 அதிகாலை 3:27 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த 9 மாத நீண்ட தாமதம், இருவருக்கும் கடினமான அனுபவமாக இருந்தது. அவர்கள் ஆரம்பத்தில்  சில நாட்களுக்கு மட்டும் தேவையான உடைகள் மற்றும் தனிப்பட்ட பொருட்களைக் கொண்டுச் சென்ற நிலையில், NASA அவர்களுக்கு கூடுதலாக தேவையான பொருட்களை அனுப்பி உதவியது. மேலும்  அவர்கள் பூமிக்கு திரும்பும் இந்த நிகழ்வை NASA நேரலையில் ஒளிபரப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.