
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் நிதிஷ்குமார்(14). இவர் சித்திரை சாவடி பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது மாமா அய்யனார் தனது ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு வருமாறு நிதிஷ்குமாரையும் குடும்பத்தினரையும் அழைத்துள்ளார்.
பள்ளி விடுமுறை விடப்பட்டதால் நிதீஷ்குமாரும் சென்று கோவில் திருவிழாவில் பங்கேற்றார். நேற்று முன்தினம் அம்மன் வீதி உலா நடந்தது. வீதி உலா வாகனத்தில் நித்திஷ் குமாரின் மாமா மகன் கிருஷ்ணராஜ் அமர்ந்திருந்தார்.
அவர் நிதிஷ்குமாரையும் தன்னுடன் வந்து அமருமாறு அழைத்துள்ளார். இருவரும் வாகனத்தில் இருந்தபடியே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீதி உலாவில் பயன்படுத்தப்பட்ட இரும்பு குடையின் மேல் பகுதி மின் கம்பி மீது உரசியதாக தெரிகிறது.
இதனால் மின்சாரம் பாய்ந்து நிதிஷ்குமாரும், கிருஷ்ணராஜும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் நிதிஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கிருஷ்ண ராஜுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.