உத்தரபிரதேச மாநிலம் பரேலியில், வரதட்சணையாக புல்லட்டுக்குப் பதிலாக ஸ்கூட்டர் கொடுக்கப்பட்டதாகக் கூறி, கணவர் தனது மனைவி மீது ஆசிட் வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரேலி மாவட்டம் கிலா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜாகிரா பகுதியில் ரோஷனி என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது கணவர் மஹ்பூஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்தி, ஆசிட் வீச முயன்றதாக புகார் அளித்துள்ளார்.

ரோஷனி புகாரில்  கூறியிருப்பதாவது, “திருமணத்தின் போது என் தந்தை ரூ.12 லட்சம் செலவில் கல்யாணம் நடத்தி, வரதட்சணையாக ஒரு ஸ்கூட்டரைக் கொடுத்தார். ஆனால் என் கணவர் புல்லட் மோட்டார் சைக்கிளும், ரூ.2 லட்சமும் வேண்டுமென்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்.

நான் மறுத்த பிறகு, ஏப்ரல் 26ஆம் தேதி அவரும், அவரது சகோதரிகளும், மைத்துனரும் சேர்ந்து என்னை ஒரு அறையில் பூட்டி வைத்தனர். பின்னர், என் மீது ஆசிட் வீச முயன்றனர்,” என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், பரேலியின் எஸ்.பி அனுராக் ஆர்யா, கிலா காவல் நிலையத்துக்கு வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி, மஹ்பூஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கடும் பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளதால், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.