தமிழக முதல்வர் ஸ்டாலின் மகளிர்கான பிரத்யேக கொள்கையை வருகிற எட்டாம் தேதி வெளியிட உள்ளார். அதில் மகளிர் மேம்பாடு பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளது. வருகிற 2021 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகளிர் கான மாநில கொள்கை வரைவு வெளியிடப்பட்டது. அதில் பெண்களுக்கான சமவாய்ப்பு, சம உரிமை, திறன் வளர்த்தல், கண்ணியம் காத்தல், பாதுகாப்பான வாழ்வுரிமை, பொருளாதார மேம்பாடு போன்றவற்றை உறுதி செய்யவும், சமுதாயத்தில் மேலான நிலையை அடையவும் அரசியலில் வாய்ப்பு பெறுவதற்கு அவர்களை தயார்படுத்தவும் உரிமை பெற்று தரவும் வழிவகை செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் “வாழ்ந்து காட்டு பெண்ணே” எனும் திட்டத்தின் மூலமாக மகளிர் வங்கி கணக்கு  தொடங்கப்பட்டு பெண்களுக்கு தேவையான கடனுதவி வழங்குவது, மகளிர் புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது. அதேபோல் பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீத பெண்கள் தலைமை பொறுப்பில் பணியாற்ற நடவடிக்கை எடுப்பது போன்ற அம்சங்களும் வரைவு அறிக்கையில்  கூறப்பட்டிருந்தது. பெண் கல்வி இடைநிற்றலை குறைப்பது, ஒவ்வொரு வருடம் குறைந்தபட்சம் ஆயிரம் பெண் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவது போன்றவை மகளிர் கொள்கையின் முக்கிய இலக்காகும். அதே போல் வரைவு கொள்கையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின் தற்போது மாநில மகளிர் கொள்கை முழு அளவில் தயாராகியுள்ளது. இதனை சர்வதேச மகளிர் தினமான மார்ச் எட்டாம் தேதி முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளார்.