விழுப்புரம் மாவட்டத்தில் நீட் தேர்வு பயத்தால் இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தது. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எனக்கு தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் கூறினார்.

ஆனால் சமீபத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் இருக்கிறது எனவும் ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் ரத்து செய்திருப்போம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதனால் எதிர்க்கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் மாணவி இந்துமதி மரணத்திற்கு திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக
இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தியறிந்து
மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நேற்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட திமுகவின் நீட் ரகசிய அரசியல் நாடகம் குறித்து நான் பேசிய நிலையில், நாமும் மருத்துவர் ஆகிவிடலாம் என்கிற உயரிய லட்சியத்தோடு அல்லும் பகலும் படித்து வரும் மாணவர்கள் மத்தியில், ஆட்சிப்பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அவர்களுக்கு விடியா திமுக அந்த நீட் ரகசியத்தை சொல்லாமல் , ரகசியம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும். அந்த நீட் ரகசியத்தை #Daddy_son உடனடியாக சொல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால், திமுக பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புகொண்டு, இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.