நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனிடையே நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அகில இந்திய மற்றும் மாநில குறுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வரையில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது வரை இந்த அறிவிப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதிக்காததால் புதுச்சேரியில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டாயமாக புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உறுதி அளித்துள்ளார். இந்த அறிவிப்பு மருத்துவ மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.