சென்னை மாங்காடு பகுதியில் ராஜாஜி (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி கட்சியின் மாநில தலைவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் பூந்தமல்லி அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் ராஜாஜியை அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கொலை செய்தது கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது.

இவர் காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். இவரை காவல்துறையினர் கைது செய்ததோடு கொலைக்கு உடனடியாக இருந்த காங்கிரஸ் பிரமுகர் கோபால், சந்தோஷ், சம்பத், ராஜேஷ் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது கோபாலின் மனைவி கௌரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அவர் உயிருடன் இருக்கும் போது தன் கணவரை பிரிந்து ராஜாஜியுடன் வசித்து வந்துள்ளார்.

இருவரும் கணவன் மனைவி போல் இருந்து வந்த நிலையில் கௌரி ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு கௌரியின் பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கியதாக  ராஜாஜி போஸ்டர் ஒட்டியுள்ளார். அதோடு கோபால் வாங்கிய சொத்துக்களில் பாதி கௌரி பெயரில் இருந்ததால் அதை கேட்டும் ராஜாஜி தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் கோபால் ராஜாஜியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் ராஜாஜியின் தம்பி கண்ணனுக்கும் கிருஷ்ணகுமாருக்கும் இடையே மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கண்ணனின் காலில் கிருஷ்ணகுமார் கல்லை தூக்கி போட்டதால் அவருடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜாஜி மற்றும் கண்ணன் இருவரும் கிருஷ்ணகுமாரை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தனர். இதை தெரிந்து கொண்ட கோபால் கிருஷ்ணகுமாரிடம் உன்னை பழிவாங்க ராஜாஜி மற்றும் அவருடைய தம்பி திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். அதோடு அவர்கள் உன்னை ஏதாவது செய்யும் முன் நீ அவர்களை கொலை செய்துவிடு என்று கூறியுள்ளார். இதனால் கிருஷ்ணகுமார் ராஜாஜியை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.