நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி ராஜுவின் அவதூறு பேச்சுக்கு மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சேலம் மேற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி ராஜு பிரபல முன்னணி நடிகை குறித்து அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் ஹோட்டலில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கி இருந்தபோது நடிகைகள் அழைத்துவரப்பட்டதாகவும், அதில் குறிப்பாக நடிகை திரிஷாவின் பெயரை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார் ராஜு.

அதாவது அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்த வெங்கடாசலம் கேட்டதன் பேரில் ரூபாய் 25 லட்சம் கொடுத்து திரிஷாவை கூவத்தூர் ஹோட்டலுக்கு நடிகர் கருணாஸ் அழைத்து வந்ததாகவும், மேலும் பெரும்பாலான நடிகைகள் அங்கு வந்தனர். அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது என பரபரப்பை கிளப்பினார். இவரது பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இயக்குனர் சேரன், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் ஏ.வி ராஜு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை திரிஷா பற்றி அவதூறாக பேசிய கருத்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்து  அவதூறு பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். மன்சூர் அலிகான் கூறியதாவது, திரைத்துறை சேர்ந்த நடிகைகள் குறித்து மிகவும் கீழ்த்தரமாக பேசியது மனதை நோகச் செய்கிறது. திரைத்துறை சகோதரிகளை அரசியல் போர்வையில் ஒருவர் விமர்சித்துள்ளார். போகிற போக்கில் நடிகைகளை கீழ்த்தரமாக பேசியது கண்டனத்துக்குரியது. இது போன்ற பேச்சுகள் ஆபத்தானவை, அருவருக்கத்தக்கவை, சமுதாயத்தை பாதிக்கும், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா பற்றி சர்ச்சை கருத்து கூறியிருந்த மன்சூர் அலிகான் தற்போது அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில், கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும் கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பானது. தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தும் எனது சட்டத் துறையிலிருந்துதான் இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.