தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் தலைதூக்கி உள்ள நிலையில், தற்போது டாஸ்மாக் பாரில் மது வாங்கி அருந்திய ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முன்பாக பாரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்பட்டுள்ளது. இதை வாங்கி குடித்த இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இருவரின் உயிரிழப்புக்கு காரணம் என்னவென்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மறுபுறம், சட்டவிரோதமாக மது விற்ற பாருக்கு வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் சீல் வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என MLA வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள இவர், ‘கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுக்கிறார்கள். டாஸ்மாக்கில் மதுபானம் குடித்தும் பலர் இறக்கிறார்கள். ஆதார் எண்ணை இணைத்து இதன் மூலம் உயிரிழப்பு ஏற்படும்போது, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.