பெரம்பலூர் மோட்டார் வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ரமேஷ் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற அவருக்கு காயம் ஏற்பட்டதால் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்‌. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 3.07 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டது. அதேசமயம் விபத்து நடந்த போது ரமேஷ் மது அருந்தியதாகவும் அவர் உரிய இடைவெளியை பின்பற்றாத குற்றத்திற்காகவும் அவருக்கு  ரூ.1,53,952-ஐ இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, மது வாசனை வீசியதாக கூறப்பட்ட போதிலும் அதன் அளவை குறிப்பிடவில்லை. அதோடு ஓட்டுனரின் ரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஆல்கஹாலின் அளவு அதிகமாக இருந்தால் மட்டும்தான் கவனக்குறைவாக இருக்க முடியும். மாநில சாலைகளில் பாதுகாப்பான இடைவெளியை பின்பற்ற முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே ரமேஷுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை விட ரூ‌. 3,53,904 ஆக அதிகரித்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதோடு மோட்டார் வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு அழைத்து வரும் நபர்கள் மீது மது வாசனை வீசினால் அவர்கள் ரத்தத்தில் மதுவின் அளவு எந்த அளவிற்கு கலந்துள்ளது என்பதை கண்டிப்பாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் பரிசோதிக்க வேண்டும் என சுற்றரிக்கை அனுப்புமாறு சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். மேலும் மது அருந்துவது குற்றமில்லை என்றும், அரசே மதுபான கடைகள் மூலம் மதுவை விற்பனை செய்வதால் மது அருந்துவதினால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசு தான் முழு பொறுப்பு என்றும் கூறினார்