கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இரண்டு தளங்களை கொண்ட இந்த திருமண மண்டபத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் சென்றனர். சிலர் படிக்கட்டு வழியாகவும், சிலர் லிப்ட் வழியாகவும் இரண்டாவது தளத்திற்கு சென்றனர். இந்நிலையில் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் வசிக்கும் தங்கம்(62), பாப்பா(60), கவிதா(28), அவரது குழந்தைகள் ஆதித்யா(12), பிரணவி சங்கர்(2) என மொத்தம் ஐந்து பேர் இரண்டாவது தளத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அந்த லிப்ட்டை காவலாளி மணிகண்டன் இயக்கியுள்ளார். புறப்பட்ட ஒரு சில நொடிகளில் லிப்ட் பழுதாகி நின்றதால் உள்ளே சிக்கி இருந்தவர்கள் கூச்சலிட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று லிப்ட் ஆப்பரேட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவியுடன் 1/2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு லிப்ட்டில் சிக்கியிருந்த 5 பேரையும் மீட்டனர். அனைவரும் பதட்டத்துடன் காணப்பட்டதால் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது. பழுதான லிப்ட்டை மண்டப நிர்வாகத்தினர் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். அப்படி இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.