
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் குமார் என்பவர் துபாயில் வேலை பார்க்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் மன்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் நேரில் சந்திக்காமல் இன்ஸ்டாகிராமிலேயே காதலித்து வந்தனர்.
கடைசியாக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இரு வீட்டாரும் செல்போனில் பேசி முடித்து திருமண ஏற்பாடுகளை செய்தனர். டிசம்பர் ஆறாம் தேதி மன்பிரீத் கவுர் ஊரான மோகவிஸ் ரோஸ் கார்டன் பேலஸ் மண்டபத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. இதனால் மாப்பிள்ளை தீபக் குமார் தனது குடும்பத்தினர் மற்றும் 150 விருந்தினர்களுடன் ஊர்வலமாக அந்த பகுதிக்கு வந்துள்ளார்.
பெண் வீட்டார் ரோஸ் கார்டன் பேலசுக்கு உங்களை கூட்டி வருவதற்காக ஆள் அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர். நீண்ட நேரமாக மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்தும் யாரும் வரவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அப்படி ஒரு பகுதியே இல்லை என கூறியுள்ளனர். மேலும் மணப்பெண்ணின் செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. கல்யாண செலவுக்காக தீபக் பெண் வீட்டாருக்கு 60 ஆயிரம் ரூபாய் பணத்தை முன்னதாகவே அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அது மட்டுமில்லாமல் மணமகளை தான் நேரில் பார்த்ததில்லை எனவும் போட்டோவில் மட்டும் தான் பார்த்ததாகவும் தீபக் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் செல்போன் எண்ணை வைத்து மணமகள் கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.