நாமக்கல் மாவட்டத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மக்கா சோளங்களில் ஏற்படும் படைப்புழு தாக்குதலால் 30 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. அதனால் உரிய நேரத்தில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகள் பயன் பெற்றுக் கொள்ளலாம். அதிலும் குறிப்பாக தாய் அந்து பூச்சிகள், அமெரிக்கன் படைப்புழு உள்ளதா? என்பதை  கண்காணிக்க விதைத்த உடன் இனக்கவர்ச்சி பொறிகள் ஹெக்டேருக்கு 5% வைத்து கண்காணித்து பொருளாதார சேதநிலை அதிகமாகும் போது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மேலும் பூச்சிக்கொல்லி பொருளாதார சேதநிலையினை கடந்து அதிகரிக்கும் போது விதைத்த 15 முதல் 20 நாட்களில் அசாடிராக்டின், குளோரன்ட்ரனிலிப்ரோல், புளூபென்டமைடு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை கைத்தெளிப்பான் மூலமாக தெளித்து கொள்ள வேண்டும். அதேபோல் மக்காச்சோளம் விதைத்த 40 முதல் 45 நாட்களில் தாக்குதல் காணப்பட்டால் இமாமெக்டின், பென்சோயேட், ஸ்பைன்டோரம், நாவாலூரான் அல்லது மெட்டாரைசியம் அனிசோபிலியே போன்றவற்றில் ஏதாவது ஒன்றை கைத்தொளிப்பான் மூலமாக தெளிக்க வேண்டும். அறுபதாம் நாள் தேவை ஏற்பட்டால் தாக்குதல் இருக்கும் பட்சத்தில் மேற்காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் தெரிந்து கொள்ளலாம். இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தையும் விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைத்து கடைபிடிப்பதன் மூலமாக படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.