விமானப் பயணிகளின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்தாரா ஏர்லைன்ஸ், இன்று கடைசி முறையாக வானில் பறந்தது. இந்தியாவின் பிரபல டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் இணைந்து ஆரம்பித்த இந்த விமான சேவை, தனது தரமான சேவையால் வேகமாக பிரபலமடைந்தது.

துவக்கத்தில் டெல்லி-மும்பை வழித்தடத்திலேயே சென்றாலும், பின்னர் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு விரிவாக்கம் பெற்றது. விஸ்தாராவின் விமானங்கள் ஏர்பஸ் ரகத்தில் வந்ததால் பயணிகள் அதிக வசதி மற்றும் சவுகரியத்தை அனுபவித்தனர். இதனால், இது குறுகிய காலத்திலேயே பிரபலமாகியது.

1953ல் டாடாவின் விமான சேவையை தேசியமயம் செய்து, அதற்கு ‘ஏர் இந்தியா’ என்ற பெயரிடப்பட்ட நிலையில், காலப்போக்கில் மீண்டும் டாடா குழுமத்தின் வசமாக ஏர் இந்தியா வந்துள்ளது. இதனால், அதில் விஸ்தாராவையும் இணைத்து ஒரே பிராண்டாக சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டபூர்வ அறிவிப்பு 2022இல் வந்த நிலையில், 2024 செப்டம்பர் மாதம் மூன்றாவது தேதி முதல் விஸ்தாரா பெயரில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டது. நாளை முதல் விஸ்தாரா விமானங்கள் ஏர் இந்தியா என்கிற பெயரில் சேவை புரியும். சேவையில் எந்த மாற்றமும் இல்லையெனவும், தரம் எப்போதும் போலவே சிறப்பாகவே இருக்கும் எனவும் டாடா குழுமம் உறுதியளித்துள்ளது.

சில பயணிகள் விஸ்தாரா விமானத்தில் பறக்கத் திட்டமிட்டிருந்தால், அந்த டிக்கெட்டுகள் ஏர் இந்தியாவிற்கு மாற்றப்படும். எனவே பயணிகள் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை.