ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சிக்கு தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த முலப்பர்த்தி ராமராஜு என்பவர் கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் கவுன்சிலர் தேர்தலின் போது குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால், தரமான சாலைகள் என பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளார். இதன் மூலம் மக்கள் அவரை தேர்வு செய்து வெற்றி அடையச் செய்தனர். ஆனால் இந்த திட்டங்களுக்காக ராமராஜு நிதி ஒதுக்க கேட்டபோது அரசு அதனை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் 31 மாதங்கள் ஆகியும் அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் தன் மேல் நம்பிக்கை வைத்து இருந்த மக்களுக்கு தன்னால் நல்லது செய்ய முடியவில்லை என மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று நகரசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது எழுந்து நின்று தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர் திடீரென தான் அணிந்திருந்த செருப்பால் தன்னைத் தானே அடித்துக் கொண்டார். பின்னர் அங்கு இருந்து அழுது கொண்டே வெளியேறியுள்ளார். வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் தன்னைத்தானே கவுன்சிலர் செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.