நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் மனித உயிரிழப்புகளும், கால்நடை உயிரிழப்பும் பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து நெல்லையில் இன்று அதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நெல்லையில் வெள்ள நிவாரண டோக்கன் பெற ரேஷன் கடைகளுக்கு வர வேண்டாம் என பொதுமக்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 6000 நிவாரணத்துக்கான டோக்கனை ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர். அப்படி டோக்கன் வழங்க செல்லும் நேரங்களில் ரேஷன் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் மட்டுமே தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.