இந்தியாவில் நான்கில் ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுவதாக நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் பாதிப்புகளில் குறிப்பிட்ட சதவீத நபர்கள் மட்டுமே முறையான மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாததால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். ரத்த அழுத்தத்தை கண்காணிப்பதற்கு முறையாக மருந்துகள் வழங்குவதை உறுதி செய்யவும் தி இந்தியா ஹைப்பர் டென்சன் கண்ட்ரோல் இனிஷியேடிவ் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக 2025 ஆம் ஆண்டுக்குள் 25 சதவீதம் உயர் ரத்த அழுத்த நோயை குறைப்பதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. உயர் ரத்த அழுத்த நோய்க்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை. இதனை அடிக்கடி பரிசோதிக்கவில்லை என்றால் கண்டுபிடிக்கவே முடியாது. எனவே பொதுமக்கள் அனைவரும் அவ்வப்போது உயர் ரத்த அழுத்தத்திற்கான பரிசோதனை செய்து கொள்வதுடன் முறையான மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.