தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புதிய வகை சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது, கடந்த சில நாட்களாக புதிய வகை சைபர் தொடர்பாக 70 புகார்கள் வந்துள்ளது. அதாவது நீங்கள் அனுப்பியுள்ள பார்சல் திரும்ப வந்துள்ளதாக கூறி உங்களுக்கு ஒரு போன் கால் வரும். இது பற்றிய தகவல் தெரிய வேண்டும் என்றால் ஒன்றை அழுத்த சொல்லுவார்கள். நீங்கள் அந்த நம்பரை அழுத்தினால் மும்பையில் இருந்து நீங்கள் தைய்வானுக்கு அனுப்பிய பார்சல் திரும்ப வந்துள்ளது.

அந்த பார்சலில் போதைப்பொருள் இருக்கிறது. இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப் போகிறோம் என்று கூறுவார்கள். உடனே உங்களிடம் டிஜிபி, காவல் அதிகாரிகள் போன்று யாராவது போனில் பேசுவார்கள். இதனையடுத்து அரசு வழக்கறிஞர் என்று கூறி ஒருவர் உங்களிடம் பேசுவார். அவர் உங்களிடம் கேசில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் தர வேண்டும் என்று கேட்பார். இப்படி போலியான தகவல்களை கூறி உங்களிடம் இருக்கும் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுவார்கள். எனவே இது போன்ற அழைப்புகள் எதுவும் வந்தால் பொதுமக்கள் கவனத்தோடு இருப்பதோடு அந்த போன் கால்களை எடுத்து பேசாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.