இந்தியாவில் அமைந்துள்ள சைவத் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கடுமையான மலைப்பாதையை கடந்து வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட வருகின்றனர்.

கைலாய மலையைப் போல வெள்ளியங்கிரி மலையிலும் ஆதிசிவன் சிலகாலம் தவநிலையில் இருந்ததால் இது ‘தென் கைலாயம்’ என்று போற்றப்படுகிறது. இந்த மலையில்தான் உமையாள் பார்வதி தேவியின் கோரிக்கைக்கு இணங்க, சிவபெருமான் பிரணவ தாண்டவத்தை ஆடியதாக சொல்லப்படுகிறது.  இந்த மலையில் இன்னும் ஏராளமான சித்தர்கள் கண்களுக்கு புலப்படாமல், அரூபமான தியானத்தில் ஈடுபடுவதாக சொல்கிறார்கள்.

ஏழு மலைகளைக்கொண்டது வெள்ளியங்கிரிக்கு யாத்திரை என்பது பரமனைப் படிப்படியாய் நெருங்குவதற்குச் சமம். இறைவனை நேசிப்பவர்களும் இயற்கையை நேசிப்பவர்களும் இதயம் கரைந்து சென்றுவரும் மலை, வெள்ளியங்கிரி.

மகாசிவராத்திரி சமயத்தில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வாகும். எளிமையான மக்களுடைய தீவிரமான பக்தியினை இந்த நிகழ்வின்மூலம் உணரலாம். சென்னை, நாகர்கோயில் உள்ளிட்ட தொலைவான ஊர்களிலிருந்தும்கூட கோவை ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்தியில் கலந்துகொள்ள பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்தே வருகின்றனர்.

அதிலும் அவர்கள் ஆதியோகி, நாயன்மார்கள் ஆகியோர் கொண்ட ரதங்களை 500 கிலோமீட்டர், 700 கிலோமீட்டர் எனும் அசாத்திய தூரங்களை கடந்து ரதத்தை இழுத்து வருகின்றனர். இத்தனை தூரம் ரதங்களை இழுத்து வந்தும், களைப்பில் உட்கார்ந்துவிடாமல் மகேசனைக்காண  வெள்ளியங்கிரி மலை ஏறி வருகிறார்கள் இந்த பக்தர்கள்.