விருதுநகர் என்.ஜி.ஓ காலனி அம்பேத்கர் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி  கற்பகம். இந்த தம்பதியினருக்கு நிகர்ஜித்(10), ஹரிஷ்(2) கண்ணா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2022- ஆம் ஆண்டு கண்ணன் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் கற்பகம் தனது மகன்களுடன் சிவகாசியில் இருக்கும் தனது அண்ணன் ஜெயக்குமாரின் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து கண்ணன் ஜெயக்குமாரின் வீட்டிற்கு சென்று இனிமேல் பிரச்சனை செய்ய மாட்டேன் எனக் கூறி ஜெயக்குமார் காலிலும், கற்பகத்தின் காலிலும் விழுந்து கெஞ்சியுள்ளார்.

இதனால் ஜெயக்குமார் தனது தங்கையை சமாதானப்படுத்தி கணவருடன் அனுப்பி வைத்தார். மறுநாள் காலை 6.45 மணியளவில் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கண்ணன் கத்தியால் தனது மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கற்பகத்தின் மீது ஏறி உட்கார்ந்து கண்ணன் ஆத்திரம் தீர கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே கற்பகம் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கற்பகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.