
சென்னை மாதவரம் தபால் பெட்டி அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு திரு.வி.க நகர் 5வது தெருவை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த ஏழு ஆண்டுகளாக செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பணியில் இருந்த முருகன் பெட்ரோல் பங்க் உரிமையாளரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அவர் நான்கு மர்ம நபர்கள் பெட்ரோல் பங்கிற்கு வந்ததாகவும், அவர்கள் கல்லாப்பெட்டியில் இருந்து 1.60 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்திய போது முருகன் முன்னுக்கு பெயர் முரணாக பதில் அளித்ததால் அவர் மீது சந்தேகம் வந்தது. இதனை எடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் வந்ததற்கான அறிகுறி இல்லை. முருகன் தான் அந்த பணத்தை திருடிவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து உரிமையாளரின் அறிவுரைப்படி போலீசார் முருகனை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரை வேலைக்கு வர வேண்டாம் என பங்க் உரிமையாளர் கூறினார். இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன் நேற்று காலை பெட்ரோல் பங்கிற்கு வந்து யாரும் எதிர்பாராத நேரத்தில் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டார். அதன் பிறகு சிகரெட் லைட்டரை எடுத்து பற்ற வைத்தார். இதனை எதிர்பார்க்காத சக ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். பின்னர் முருகனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.