
சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. பொதுவாக போட்டியை நடத்தும் நாட்டின் பிரதிநிதிகள் தான் கோப்பையை வெற்றி பெற்று அணிக்கு வழங்குவார்கள். ஆனால் இந்த முறை பாகிஸ்தான் நாட்டிலிருந்து யாரும் கலந்து கொள்ளாத நிலையில் இதற்கு முன்னாள் பாக் வீரர் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
அதாவது முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷொய்ப் அக்தர், இம்முறை துபாயில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் நிகழ்வின் பரிசளிப்பு விழாவில் எந்தப் பாகிஸ்தான் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளாததற்கு தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். போட்டியை நடத்தும் நாட்டு நிர்வாகிகள் இல்லாமல் இந்திய அணிக்கு கோப்பையை வழங்கியது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் வீடியோ வெளியிட்ட அக்தர், இது தன்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியதைக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) எந்த அதிகாரியும் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பதால், இறுதிப் போட்டிக்குப் பிறகு கோப்பை வழங்கும் நிகழ்வில் இந்திய கிரிக்கெட் வாரிய (BCCI) தலைவர்கள் மட்டுமே மேடையில் இருந்தனர். ஐசிசி தலைவர் ஜெய் ஷா கோப்பையை வழங்க, பின் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி வெள்ளை பிளேசரை இந்திய அணிக்கு வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்றும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கலந்து கொண்டனர். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி கூட விழாவில் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய அணி இந்த தொடரில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வி அடையாமல் பட்டத்தை வென்றுள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 252 ரன்கள் இலக்கை நோக்கி விரைந்த இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா 76 ரன்கள் அடித்து முக்கிய பங்கை வகித்தார். அதே நேரத்தில், வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து அணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தினர். இதனால், பாகிஸ்தான் மைதானங்களில் தொடர் நடத்தப்பட்டிருந்தும், இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டதால் பாகிஸ்தானில் இறுதிப் போட்டி நடத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.