மாரடைப்பை முன்னதாகவே கண்டறியும் மொபைல் செயலியை 14 வயது சிறுவன் கண்டுபிடித்துச் சாதனை படைத்துள்ளான். ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த மகேஷ், 2010ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அவரின் மகன் சித்தார்த், “சிர்கடியன் ஏ.ஐ.” எனும் செயலியை உருவாக்கி, இதய துடிப்பு ஒலிகளை பதிவு செய்து, ஆரம்ப கட்ட இருதய நோய்களை மிகத் துல்லியமாக கண்டறியும் முறையை உருவாக்கியுள்ளார். அமெரிக்காவின் பல்வேறு மருத்துவமனைகளில் இது சோதிக்கப்பட்டதில், இது 96 சதவீதம் துல்லியத்துடன் மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் திறன் கொண்டது என்பது உறுதியாகியுள்ளது.

இந்த செயலியின் செயல்திறனை சோதித்து காட்ட விரும்பிய சித்தார்த், தனது தந்தையுடன் அண்மையில் ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு மருத்துவமனையில் சோதனை செய்தார். அங்கு ஒரே நாளில் 700 நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து சித்தார்த், முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும், துணை முதல்வர் பவன் கல்யாணையும் அமராவதி தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து, தனது கண்டுபிடிப்பு குறித்து விளக்கம் அளித்தார். முதல்வர் அவரை பாராட்டி, உலகின் முன்னணி ஏ.ஐ. சான்றிதழ் பெற்ற இந்த செயலிக்கு ஆந்திர அரசு முழுமையான ஆதரவை வழங்கும் என உறுதியளித்தார்.