சென்னை கோட்டை போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் முதல்நிலை போலீஸ்காரராக பணியாற்றியவர் லோகேஷ் (39). மனஉளைச்சலில் இருந்த லோகேஷ் கடந்த பிப்.5 ஆம் தேதி வீட்டின் கழிப்பறையில் இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன்பாக உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஆடியோ வெளியிட்டார். அதில் கோட்டை போக்குவரத்து இன்ஸ்பெக்டராக இருந்து வந்த கருணாகரன், பூக்கடை போக்குவரத்து உதவி கமிஷனர் சம்பத்பாலன் போன்றோர் போலீஸ் வாகனத்தில் 100 லிட்டர் டீசல் திருட சொல்லி வற்புறுத்தினர். இப்போது கருணாகரன் கானத்துார் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.

உதவி கமிஷனர் ஒவ்வொரு மாதமும் 5 லட்சம் ரூபாய், இன்ஸ்பெக்டர் 1.5 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெறுகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் முறையிலும் குளறுபடி செய்து லஞ்சம் வசூலிக்கின்றனர் என அந்த ஆடியோவில் தெரிவித்திருந்தார். லோகேஷ் இறந்துள்ள நிலையில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் போன்றோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினர் போர்க்கொடி உயர்த்தி இருக்கின்றனர்.

இது தொடர்பாக முதல்வர், டி.ஜி.பி., மற்றும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு காவல்துறையினர் அனுப்பியுள்ள கடிதத்தில் “லோகேஷ் இறப்புக்கு காரணமான உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றப்படுகின்றனர். ஒரு உயிர் சம்பந்தப்பட்டது என்பதால் லோகேஷ் குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. உதவி கமிஷனர் சம்பத் பாலன், இன்ஸ்பெக்டர் கருணாகரன் மீது தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். லஞ்ச வழக்கு காவல்துறையினரும் விசாரிக்க வேண்டும். ஆகவே அவர்களை பணிநீக்கம் செய்யவேண்டும்” அதில் கூறப்பட்டுள்ளது.