தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தன்னாட்சி கல்லூரிகளுக்கான விதிமுறைகளுக்கு கடந்த ஜூன் மாதம் இருபதாம் தேதி நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரம் பெறுவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

இதற்கு மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம் மற்றும் அனுபவம் உடைய பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சிகள் என சிறந்த கட்டமைப்புகளை கல்லூரிகள் கொண்டிருக்க வேண்டும். இதற்கு முன்பாக தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பில் மாணவர் சேர்க்கை 60% இருந்தால் போதும் என இருந்த நிலையில் தற்போது அதை 70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாத கல்லூரிகளில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.