
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு மற்றும் செயற்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில் அவர் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு கட்சி நிர்வாகிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழல் பட்டியலை தயார் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார். அதோடு வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் மீது அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் விமர்சனங்களை குவிக்கிறார்கள். குறிப்பாக சீமான் விஜயை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
இருப்பினும் சமீபத்தில் சீமானுக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜய் அறிவுறுத்தலின் பெயரில் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் நிர்வாகிகளிடம் விஜய் பேசும்போது கண்ணியத்துடனும் தனிநபர் தாக்குதல் இல்லாத வாரும் பேச வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக கூறினார். அதன்பிறகு எதிர்த்தரப்பினர் தரம் தாழ்ந்து பேசினாலும் நாம் அவர்களுடன் மல்லு கட்ட கூடாது.
விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் நம்முடைய கருத்துக்களை புரிந்து கொள்ளும் விதமாக எடுத்துரைக்க வேண்டும். எப்போதுமே பொறுமை சகிப்புத்தன்மை போன்றவற்றை கடைபிடிப்பதோடு எந்த சூழ்நிலையிலும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிக்க கூடாது. பேசுபவர்கள் பேசிவிட்டு போகட்டும். ஆனால் நாம் எந்த ஒரு காரணத்தை கொண்டும் பிற கட்சி நிர்வாகிகளை தரம் தாழ்ந்து விமர்சிக்க கூடாது. மேலும் தமிழக வெற்றி கழகத்தினர் எப்போதும் கடமை கண்ணியம் மற்றும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.