நவீன காலத்து மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் குழந்தைகளின் பார்வைத் திறனை ஆபத்துக்குள்ளாக்கி வருகிறது. இந்தத் பழக்கம், சிறார்களில் பார்வை குறைபாடான மயோபியா (Myopia) நோயை பெரிதும் வளர்த்து வருகிறது. சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்திய சமூக கண் மருத்துவர் சங்கம் (ACOIN) சுட்டிக்காட்டியதாவது, “2050க்குள் பள்ளியில் கல்வி பயிலும் இந்தியக் குழந்தைகளில் 50% பேருக்கு மயோபியா ஏற்படும் அபாயம் உள்ளது” என எச்சரித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களில் 23% பேர் மயோபியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது அருகில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரிந்தாலும், தொலைவில் உள்ளவை மங்கலாகத் தான் தெரியும். கோவிட் பெருந்தொற்றின் போது ஆன்லைன் வகுப்புகள், வீட்டு உள்புறத்தில் அதிக நேரம் செலவிடுதல் மற்றும் வெளிப்புற விளையாட்டின்மை ஆகியவை இந்தப் பிரச்சனையை மோசமாக்கியுள்ளன. 2024ஆம் ஆண்டில் சூர்யா கண் மருத்துவமனையில் மட்டும் 2,000க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு மயோபியா கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்கள் டிவி மற்றும் செல்போன் பார்ப்பதை கட்டுப்படுத்துவது, தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் வெளியில் விளையாட அனுமதிப்பது, கண் பராமரிப்பு பழக்கங்களை ஏற்படுத்துவது மற்றும் ஆண்டுதோறும் கண் பரிசோதனைகளை மேற்கொள்வது இப்பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்காலிகமாக நான்கு கண் கண்ணாடி அணிவதன் மூலம் பார்வை சீராக்கலாம்; ஆனால் நீண்டகால தீர்வாக, வாழ்க்கைமுறை மாற்றங்கள் அவசியம். பெற்றோர்கள் தற்போதே நடவடிக்கை எடுத்தால், எதிர்காலத்தில் குழந்தைகளின் பார்வை பாதுகாக்கப்படலாம் எனவும், பார்வை குறைபாடு உள்ளிட்ட சிக்கல்களைத் தவிர்க்கலாம் எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.