பீகார் மாநில தலைநகர் பாட்னாவின் பைபாஸ் காவல் நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக ஹோம்கார்டாக பணியாற்றி வந்த சோனு குமார், அந்த காவல் நிலையத்திற்கு உணவு சமைக்க வந்த ரூபா என்ற பெண்ணுடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று குழந்தைகளின் தாயான ரூபா, தனது குடும்பத்தின் பொருளாதார நிலைமையால் கடந்த 7 ஆண்டுகளாக பைபாஸ் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு உணவு சமைக்கும் வேலை செய்துவருகிறார்.

இந்தநிலையில், ரூபாவின் கணவர் அளித்த புகாரில், சோனு குமார் கடந்த 6 மாதங்களாக அவரது வீட்டிற்கு தொடர்ந்து வருவதாகவும், பல்வேறு நேரங்களில் அத்தியாவசிய பொருட்களையும் கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஒரு நாள் சோனுவின் வருகையை அவர் எதிர்த்தபோது, “உங்களது வறுமை காரணமாக நான் உதவிக்காக வருகிறேன்” என்று சோனு கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஜூலை 13ஆம் தேதி இரவு, சோனு மற்றும் ரூபா இருவரும் திடீரென காணாமல் போனதால், பதறிய கணவர், பைபாஸ் காவல் நிலையத்தில் முறையிட்டார்.

இதே காவல் நிலையத்தில் பணியாற்றும் ஹோம்கார்டு மீதான இந்த புகாரால் போலீசாரே குழப்பமடைந்துள்ளனர். சோனு குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருப்பதும், ரூபாவுக்கும் மூன்று பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால், குடும்பம் கலங்கிய நிலையில் இருக்கிறது. பாதிக்கப்பட்ட கணவர் தற்போது தனது மனைவியைத் தேடி காவல் நிலையத்திற்கு  தினமும் சென்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பைபாஸ் காவல் நிலைய பொறுப்பாளர் ராஜேஷ் குமார் ஜா கூறுகையில், “புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் ரூபாவை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், சமூக வலைதளங்களில் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.