இன்றைய காலக்கட்டத்தில் செல்போன்கள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன. சிறு நேரம் கூட கிடைத்தாலே திரை பக்கம் கவனம் செல்லும் அளவுக்கு, ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் சமூக வலைதளங்கள் இளைஞர்களை ஆட்கொண்டு விடுகின்றன. இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் ஒரு புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 25 வயதுக்குட்பட்ட 104 ஆண்கள், 293 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தினமும் தொடர்ந்து 100 சதவீதம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின் முடிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமான வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக, அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இளம்பெண்களுக்கு மனநலம் பாதிக்கப்படும் சாத்தியங்கள் அதிகம் காணப்படுகிறது. அவர்கள் மன உளைச்சல், சமூக பதட்டம் மற்றும் மன அழுத்தத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் ஆண்களைவிட அதிகம் என்று ஆய்வு கூறுகிறது. மேலும், தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள் மற்றும் தற்கொலை எண்ணம் போன்றவையும் அதிகப்படியாக உருவாக வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள், இளைய தலைமுறையின் மோசமான ஸ்மார்ட்போன் பழக்கத்தை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என தெரிவிக்கின்றனர். ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் ஏற்படும் மன அழுத்தம், சமூக உறவுகளின் குறைபாடு, மற்றும் நலன் குறைந்த வாழ்க்கை முறையை தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் எதிர்காலத்தில் மேலும் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.